இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 29 June 2014

அலைச்சல்

காலையில் இருந்து ஒரே அலைச்சல் தான்.அதுவும் இந்த வயதான காலத்தில் உடம்பு தாங்க வேண்டுமே|

என்னைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே!! எழுபத்து மூன்று வயதான கிழவன்----இளையோர் மொழியில் ‘பெரிசு’. இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து போஸ் ஹாஸ்பிடலில் ICU விலும் ஒரு முறை சென்னை லைப் லயனில் ICU வியிலும் படுத்திருந்து பிழைத்து வந்தவன்.

தெரிந்த கதை தானே விஷயத்துக்குவா என்கிறீர்களா? இதோ வந்தேன்.

காலையில் கரண்டு பில் கட்டிவிட்டு மருத்துவரைப் பார்க்கப் போனேனா – டாக்டர் ஊருக்குப் போய்விட்டார் வர ஐந்து நாளாகும் என்றார்கள். 

இவர் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட். கீழே விழுந்து கொஞ்சம் இடுப்பில் பிராக்சர் – அவர் தான் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து மருந்தும் கொடுத்து பெல்ட்டும் போட்டு விட்டார்.

சரி என்று பஸ் ஏறி வீடு வந்தேனா? தொடர்ந்து அடுத்த வேளை ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டேன். இல்லை, இல்லை பிரச்சனை என்னை சிக்க வைத்து விட்டது.

விஷயம் என்னவென்றால் என் இந்த மாத பென்ஷன் பணத்தில் இருந்து மருத்துவச் செலவுக்கும், குடும்பச் செலவுக்கும் ஒரு இருபதாயிரம் எடுக்கப் போனால் பணம் இல்லை என்றார்கள்.’நன்றாகப் பாருங்கள் முப்பத்தேழாயிரம் பக்கம் இருக்கும்’ என்றேன். அதற்கு,’ காஷியர் மொதல்ல பாஸ்புக்கில் என்ட்ரி போட்டுப் பாருங்கள்’-- என்று கூலாகச் சொல்லி அனுப்பவும், நானும் பிரிண்டர் உள்ள கவுண்டரில் போய் கியூவில் நின்று… நின்று.. ரொம்ப நேரம் நின்று… என்ட்ரி போட்டுப் பார்த்தால் பதினேழாயிரத்துச் சொச்சம் போன வாரம் எடுக்கப்பட்டுள்ளது.

எப்படி??

நான் எடுக்கவில்லையே!! வங்கி அலுவலரிடம் சென்று முறையிட்டேன். என்னுள்ளும் ஒரு சந்தேகம் லேசாக இருந்தது. போன மாதம் ஒரு பதினேழாயிரத்துச் சொச்சம் என் பென்ஷனாக வரவாகி இருந்தது. எனக்கு அவ்வளவு வராதே. பத்தாயிரத்துச் சொச்சம் தானே என் பென்ஷன் என்று காஷியரிடம் அப்போதே கூறி கொஞ்சம் சரி பாருங்கள் என்றும் வேண்டுகோள் விட்டேன். ஆனால் அந்த மகானுபவரோ ‘இல்லை, இல்லை, இந்த மாதம் வந்த உங்கள் பென்ஷன் தொகை இது தான். ஏதாவது அரியர் சேர்ந்து வந்திருக்கும்’ என்று சொல்லி விட்டார். நானும் அப்போது வீட்டுச் செலவுக்கு ஒரு ஐந்தாயிரம் மட்டும் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன்.

      அது தான் நான் செய்த தப்போ?

இப்போது என்னடாவென்றால் திடீர் என்று பதினேழாயிரத்துச் சொச்சம் மாயமாகி விட்டதே.

வங்கி அலுவலரும் எனக்காக மெனக்கெட்டு கம்யூட்டர் பட்டன்களை டொக்கு டொக்கு என்று டொக்கியும் மௌஸை அப்படியும் இப்படியும் நகர்த்தியும் பார்த்துவிட்டுச் சொன்னார், ‘சார்! அந்த பதினேழாயிரத்துச் சொச்சம் ராஜேஸ்வரனுடையது. டிரஸரியில் இருந்து அதை அவர் பெயருக்கு மாற்றிவிடுமாறு கடிதம் வந்ததால் மாற்றி விட்டோம் என்று சர்வசாதரணமாகச் சொன்னதும் எனக்கோ—

எரிச்சலோ எரிச்சல்!                             

அட, அப்படித்தான் மாற்றுவதாக இருந்தாலும் எனக்கு ஒரு தகவல் – செல்போனில் ஒரு வார்த்தை தெரிவித்திருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்திருந்தால் நான் இப்படி பணம் எடுக்க வந்து ஏமாந்திருக்க மாட்டேனே?

        ‘சரி, அப்படியானால் என் ஜனவரி பென்ஷனாவது வந்திருக்க வேண்டுமே’ என்று நான் வங்கி அலுவலரிடம் வினவியதும்! அப்படி எதுவும் வரவில்லை. இது பற்றி நீங்கள் டிரஸரியில் போய்த் தான் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டார். என்ன செய்வது! யாரோ செய்த ஒரு சிறு பிழையால் வயதான காலத்தில் இப்படி ஒரு அலைச்சல்.

மறுநாளே இரண்டு பஸ் மாறி ஆட்சியர் அலுவலகம் சென்று கருவூலப் பகுதியில் நுழைந்து சம்பந்தப்பட்ட எழுத்தரைத் தேடினால் அவர் அன்று லீவில் இருப்பதாகக் கூறி மறுநாள் மதியம் மூன்று மணிக்கு வருமாறு சூப்ரண்ட் கூறினர்.

இதுதான்ய்யா நான் சிக்கிக் கொண்ட பிரச்சனை.

பிப்ரவரி மாத பென்ஷன் வந்து விட்டது. ஆனால் ஜனவரி மாத பென்ஷன் தான் (வேறு ஒருவருடையது வந்து அவருக்கே திருப்பப்பட்டது). இதை விளக்கி என் பென்ஷனை கேட்கத்தான் இதோ கிளம்பிக் கொண்டுருக்கிறேன்.

மணி மதியம் இரண்டரையாகி விட்டது. பேருந்து நிறுத்தத்தில் நான் வந்து நின்று ஒரு மணி நேரமாகப் போகிறது – இன்னும் பஸ் வரவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு பஸ் மாறி நான் எப்போ ஆட்சியர் அலுவலகம் சென்று சேருவது. இந்த நேரத்தில் - காசைப் பார்த்தால் காரியம் ஆகாதென்று துணிந்து போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினேன். அறுபது ரூபாய் கேட்டார். ஆட்டோ ஒட்டுநர். காசு பெரிசா? காரியம் பெரிசா? ஆட்டோவில் ஏறிப் பயணப்பட்டு கால்மணி நேரத்தில் – சரியாக மூன்று மணிக்கே கருவூல அலுவலகத்தில் நுழைந்தால் அங்கே எல்லா இருக்கைகளிலும் எல்லா அலுவலர்களும் அமர்ந்து கர்ம சிரத்தையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே சில எழுத்தர்களின் கேபின் முன் என் போன்ற பெரிசுகள் நின்று தங்கள் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் –---

என்னவென்று சொல்வது? எல்லாம் என் போதாத வேளை! என் பென்ஷன் சம்பந்தப்பட்ட அந்தக் குறிப்பிட்ட எழுத்தரை மட்டும் காணோம் !

சூப்ரண்ட் என்னைப் பார்த்ததுமே ‘நீங்க தானே நேத்து ஜனவரி பென்ஷன் விஷயமா வந்தீங்க?’ என்று என்னை அடையாளம் கண்டு கேட்டதுடன் அந்த அலுவலர் சாப்பிடப்போயிருக்கிறார். சற்று வெராண்டாவில் உட்கார்ந்திருங்கள். வந்து விடுவார்!’ என்றார்.

நானும் வராண்டாவில் வந்து உட்கார்ந்து…………….. உட்கார்ந்து…………………. காத்திருந்து………………………….. காத்திருந்து…………………………..

அப்பாடா! நான்கு மணிவாக்கில் அவரும் வந்து சேர்ந்தார்.

அவர் இருக்கையில் அமரும் வரை காத்திருந்து அவர் அமர்ந்ததும் அவர் முன் நின்று விஷயத்தை விலாவாரியாக விளக்கினேன்.

       ‘அப்படியா?’ என்ற வினாக்குறியை என் முன் நீட்டியவர், ‘அந்த பென்ஷன் பணம் யார் பெயருக்கு மாற்றப் பட்டிருக்கிறது என்பதாவது தெரியுமா?’ என்று கேட்டார்

       ‘தெரியும் ஐயா, வங்கியில் விசாரித்தேன். என்னுடன் பணியாற்றிய ராஜேஸ்வரன் என்பவர் பெயருக்கு மாற்றப் பட்டிருக்கிறது. அந்தப் பென்ஷன் தொகை அவருக்குரியது என்று இங்கிருந்து கடிதம் வந்ததால் அவர்கள் பணத்தை டிரான்ஸ்பர் செய்ததாகச் சொன்னார்கள்!’ -- என்று கூறிவிட்டு நானும் அவர்தம் கம்ப்யூட்டரில் லொட்டு லொட்டு என்று பட்டனை லொட்டியும் மௌஸை அங்கும் இங்கும் ஓட விட்டும் கண்டு பிடித்து என் பென்ஷனை வங்கிக்கு அனுப்பிவிடுவார் என்ற பெருத்த பேராசையுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ----

  அந்த மகானுபவரோ கம்ப்யூட்டர் பக்கமே தன் பார்வையை ஓட்டவிடாமல் பெரிய பெரிய லெட்ஜர்களை எடுத்துப் புரட்டியும், பைல்களை எடுத்து ஆராய்ந்தும், ‘ஆமாம்! ஜனவரி மாத பென்ஷன் லிஸ்ட்டில் உங்கள் பெயரையே காணோமே! அப்படியானால் உங்கள் பென்ஷன் தொகை வேறு யாருக்கு போயிருக்கும்?’ --- என்று அதிர்ச்சியூட்டும் கேள்வி ஒன்றை என் முன் தூக்கிப்போட்டார்.

      அதாவது, தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறாராம் அப்படி! ஒரு – ஒரு மணி நேரத்திற்கு மேல் என்னை நிற்க வைத்து பல லெட்ஜர் பைல்களை ஆராய்ந்து விட்டு, ‘எதற்கும் நீங்கள் நாளை மதியம் இதே நேரத்திற்கு வாருங்கள்! அதற்குள் நான் என்னவாயிற்று என்று பார்த்து வைக்கிறேன்!’ என்றார்.

      நானும் அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினேன். வேற வழி? மெல்ல நடந்து பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சிறிது நேரம் காத்திருந்தேன். அதிக களைப்பாக இருந்தது. அருகில் இருந்த விசாலம் காபி ஸ்டாலில் ஒரு ஸ்ட்ராங் டீ வாங்கிக் குடித்துமீண்டும் பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என் போதாத வேளை……………
வேறு என்ன சொல்ல?

எனக்குத் தேவையான பேருந்தைத்தவிர மற்றெல்லா பேருந்துகளும் வந்த வண்ணம் சென்ற வண்ணம் இருந்தன. எனக்கோ பயங்கர அலுப்பு. இடுப்பில் பெல்ட் போட்டிருந்தும் ரொம்ப நேரம் நின்றதாலோ என்னவோ கொஞ்சம் கொஞ்சம் வலி எடுக்க ஆரம்பித்தது.

வேறு வழி!

ஆட்டோவைப் பிடித்து அறுபது ரூபாய் செலவழித்து வீடு வந்து சேர்ந்தேன்.

       ‘அப்பாடா!’ என்று கொஞ்ச நேரம் கட்டிலில் உடலைக் கிடத்தினேன்.

                        *************


மறுநாள் மதியம் தவறாமல் அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆட்சியர் அலுவலகம் சென்றேன். பணம் ஆயிற்றே! வயதானக் காலத்தில் தானே மருந்து மாத்திரை டாக்டர் என்று எனக்கும் என் மனைவிக்கும் ஆயிரக்கணக்கில் மாதந்தோறும் செலவிட வேண்டி உள்ளது.

எனக்கோ மகன் இல்லை. கடவுள் அந்தப் பிராப்தம் தராவிட்டாலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள். எங்கள் உயிரை உடம்புடன் ஒட்ட வைத்துக் கொள்ள இந்த பென்ஷன் தான் துணை. அதிலும் பிரச்சனை என்று வந்தால்.............. தெய்வம் தான் துணை----------

வேறு என்ன சொல்ல?

சரி, ஆட்சியர் அலுவலகம் சென்றேனா? என் துரதிஷ்டம் என்னை விடுவேனா என்றது. நான்தான் விருச்சிக ராசிக்காரனாயிற்றே! இப்போது நடப்பதும் ஏழரை நாட்டுச் சனியாயிற்றே!! விடுமா சனி!

ஆட்சியர் அலுவலகம் வெறிச் சோடிக் கிடந்தது. ‘என்னடா இது – உலக அதிசயம்?’ – என்று உள்ளே நுழைந்து விசாரித்தால், அன்று அதாவது இன்று தெலுங்கு வருடப்பிறப்பாம் – அரசு விடுமுறையாம். இது எனக்கும் நினைவில்லை. நேற்று வரச் சொன்ன எழுத்தருக்கும் நினைவிருந்திருக்காது – என்றாலும் அலைச்சலும் காசு நஷ்டமும் எனக்கே எனக்குத்தானே!

சனீ’ஸ்வரா! என்று வழியில் ஒரு சிவன் கோயிலுக்குள் நுழைந்து சனி பகவானுக்கு ஒரு கும்பிடு போட்டு எள் தீபம் ஏற்றி விட்டு வந்தேன்.

இனி அவர் கருணை காட்டினால் தான் உண்டு! இல்லை – இல்லை தான்!

அதற்கு மறுநாள் போகலாம் என்றால் அன்று காலையிலேயே ஊரில் இருந்து என் பெரிய மகள் – மாப்பிள்ளை வந்து விட்டார்கள். அவர்களை வரவேற்று உபசரித்து அளவளாவி பொழுது அப்படியே போய் விட்டது. அவர்கள் இங்கிருந்த இரண்டு நாள்களும் எங்கும் போக முடியவில்லை. வேறு பல ஜோலிகள்.

இப்படியே நான்கைந்து நாள்கள் கழிந்ததும் வந்த கிழமை சனி, ஞாயிறு. கருவூலம் விடுமுறையாக இருக்குமே என்று இப்படி ஒரு வாரத்தை பென்ஷன் நினைவிலேயே ஓட்டிவிட்டு அடுத்து வந்த திங்கட்கிழமை மதியம் ஆட்சியர் அலுவலகம் போய் அந்த எழுத்தர் முன் நின்றதும் அவர் என்னைப் பார்த்தார். பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். ‘வாங்கய்யா, வாங்க! எங்கே ஒரு வாரமா வரவேயில்லையே!’ – என்று அவர் கேட்டதும், ‘அப்பாடா’ நம் வேலை முடிந்திருக்கும் போல் இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்து சென்றதைக் கூறி வர முடியாமற் போன காரணத்தைச் சொல்லி தொடர்ந்து, ‘என் ஜனவரி மாத பென்ஷன்?’ என்ற கேள்விக்குறியை அவர் முன் நீட்டினேன். மனுசன் அசருவதாக இல்லை.

      ‘அதைத்தானே நான் தேடிக்கொண்டு இருக்கிறேன். சீக்கிரம் கண்டுபிடித்து விடுவேன்! ஒன்று செய்யுங்கள். நீங்கள் பாவம் இந்த வயசான காலத்தில் இந்த வேகாத வெயிலில் அலைந்து கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மொபைல் நம்பரைக் கொடுத்து விட்டுப் போங்கள். கண்டு பிடித்து சரி செய்ததும் உங்களுக்கு போன் செய்து தெரிவிக்கிறேன்!‘ என்றார்.

           என்ன செய்வது? நம்பியாரைப் போல் கையைப் பிசைவதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. என் செல்போன் நம்பரைக் கொடுத்து விட்டு, ‘ஐயா, கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொடுங்கள் ஐயா!’ என்று கழிவிரக்கமிகு வேண்டுகோளையும் அவருக்கு அர்பணித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்ததும் ---

      என் மனைவி கேட்டாள்.

      ‘போன காரியம் என்னவாயிற்று?’ விஷயத்தைச் சொன்னேன். 

      ‘அது சரி, உங்க செல்போன் நம்பரை அவரிடம் கொடுத்த மாதிரி அவரது செல்போன் நம்பரை நீங்கள் கேட்டு வாங்கினீர்களா?’ – என்று என் மனைவி கேட்டதும் தான் என் மூளைக்குச் ‘சுரீர்’ என்று பட்டது. என்னவானாலும் அவளுக்குள்ள புத்திசாலித்தனம் எனக்கு வராதுதான்.

      இனி என்ன செய்வது?

      செல்போன் அழைப்பிற்காக காத்திருக்க வேண்டியது தான்.

      என் ஜனவரி மாத பென்ஷன் எங்கே பேயிற்று என்று கண்டுபிடிக்கப் பட்டு அதை என் வங்கி கணக்கிற்கு மாற்றியதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன், என்ன?


    அது வரை------
    நானும் காத்திருக்கிறேன்!
    நீங்களும் காத்திருங்கள்!
      நம்பிக்கையே வாழ்க்கை

தும்பிக்கையான் துணை!

Saturday 28 June 2014

முளையில் முளைத்த பிழை

                நடந்தது இது தான்.

                சண்முகத்திற்க்கும், சுந்தரிக்கும் திருமணமாகி ஐந்தாண்டு காலத்திற்க்குள் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டாள். ஆனாலும் அவர்கள் உள்ளத்தில் திருப்தி இல்லை. ஏக்கமே மேலேங்கி நின்றது. அது --

                தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும். அதற்க்கு விதவிதமான ஆடை அணிகலன்களைப் பூட்டி பார்க்க வேண்டும். அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அழகான மாப்பிள்ளைத் தேடிப் பிடித்து  அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளையை முன் நிறுத்தி பெருமிதமாய் காரியங்களைச் செய்ய வேண்டும்.

                இப்படி எல்லாம் அவர்கள் இருவரும் கனவு கண்டு, கனவு கண்டு பெண் குழந்தைக்காக  ஏங்கினார்கள்.
                ஏன்?
             
                இப்போதும் சுந்தரி நிறைமாதம். பிறக்கப் போவது பெண்ணாக இருக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி , காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி உள்ளிட்ட சகல பெண் தெய்வங்களையும் வேண்டி வேண்டி பிரார்த்தித்தார்கள்.

                வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்று அறியத் துடித்தார்கள். ஆனால் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது சட்டவிரோதம் என்று மருத்துவர் கண்டிப்பாகக் கூறித் தடுத்துவிட்டார்.  கர்பிணி தரையில் உட்கார்ந்திருந்து எழுந்திருக்கும் போது இடது கையை ஊன்றிய படி எழுந்தால் வயிற்றில் இருப்பது பெண்குழந்தை  என்று ஒரு சாரரும் இல்லை... இல்லை வலது கை ஊன்றி எழுந்தால் தான் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதாக ஐதிகம் என்று மறு சாரரும் கூற குழம்பிப் போனார் திருவாளர் சண்முகம்.

                இருந்தாலும் ஒரு மனத் திருப்திக்காக மனைவி தரையில் அமர்ந்திருந்து எழுந்திருக்கும் போதெல்லாம் அவளறியாமல் கண்காணித்தார்.

                விளைவு....

                காலையில் தரையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டு எழுந்திருக்கும் போது இடது கையை ஊன்றிய படி எழுந்தாள். இடது கை சொன்னவர்கள் தான் சரியாகச் சொல்லியிருப்பார்கள். எனவே பெண் குழந்தையாத் தான் இருக்கும் என்று சண்முகத்தின் மணம் கொஞ்சம் குதூகலித்தது.

                மாலையில் தரையில் அமர்ந்த காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த சுந்தரி காபி குடித்து முடித்ததும்,  'என்னங்க! என்று கணவனை அழைத்து காப்பி டம்ளரை அவரிடம் நீட்டி விட்டு எழுந்தாள்.
                காபி டம்ளரை வாங்கிய படி உன்னிப்பாக - வெகு வெகு கவனமாக கண்காணித்தார் சண்முகம்.

                தரையில் இருந்து எழுந்திருக்கும் போது சுந்தரி வலது கையை தரையில் ஊன்றிய படி எழுந்ததும்  
                அடியோடு குழம்பிப் போய் விட்டார் சண்முகம்.
             
                காலையில் இடது கையை ஊன்றி எழுந்தவள் இப்போது வலது கையை  ஊன்றி எழுகிறாளே. அப்படியானால்-----
                பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

                சண்முகத்திற்கு ஒரே குழப்பம். காலம் தான் அவரது குழப்பத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்.

                தீர்த்து வைத்தது,
 
                இடுப்பு வலி எடுத்ததுமே சுந்தரியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்று அட்மிட் ஆகி சினமாக்களில்  வரும் அப்பாக்கள் போல சண்முகமும் மருத்துவமனை வராண்டாவில் - கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அருண், வருண், மருண் என்ற அவருடைய அருமந்த புத்திரர்களை அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த படி அப்பாவையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

                தங்களுக்கு எத்தனையோ தடவை வயிற்று வலி வந்த போது அப்பவோ, அம்மாவோ இப்படி துடித்ததில்லை. ஒரு டம்ளர் கஷாயம் கொடத்து சரி செய்து விடுவார்களே. இப்போ அம்மாவுக்கு வலி வந்ததும் மட்டும் அப்பா ஏன் இப்படித் துடிக்கிறார். அதுவும் ஆஸ்பத்திரி வரைக்கும் வந்து....

                                பாவம் குழந்தைகளுக்கும் புரியவில்லை.

                                தீடீர் என்று மருத்துவமனையின் நிசப்தத்தை  கிழித்துக் கொண்டு குழந்தை குவா குவாவும் சப்தம் கேட்டதும் சண்முகத்தின் பரப்பரப்பு அதிகரித்தது. மார்புத் துடிப்பு தாறுமாறாக  அலைபாய்ந்தது.

                 'அப்பாடா!!!

                நர்ஸ் ஒருவர் வெளியில் வந்தார். ஆவலுடன் அவரை நோக்கி ஓடினார் சண்முகம்.
                 'ஆண் குழந்தை! '
                மகிழ்ச்சியுடன் சென்னார் நர்ஸ்.

                வாடி வதங்கி சோர்ந்து போனார் சண்முகம்.

                                                                ***************

                                சண்முகமும் சுந்தரியும் முடிவே செய்து விட்டார்கள். தங்கள் தலை எழுத்தே இவ்வளவு தான் என்று. என்றாலும்

                ஒரு பழமொழி சொல்வார்களே  'விதியை மதியால் வெல்லலாம்' என்று. அப்படி வென்றெடுப்பது என்று தம்பதியர் முடிவு செய்தார்கள். உறுதி பூண்டார்கள்.

                தாங்கள் கையெடுத்துக் கும்பிட்டுப் பிரார்த்தனை செய்த பெண் தெய்வங்கள் எல்லாம்  தங்களைக் கைவிட்டாலும் தங்களின் மேலான - மேன்மையான மதி கைவிடாது என நம்பினார்கள். அதன் விளைவு.

                பிறந்த குழந்தை ஆணாக இருந்தால்  அதைப் பெண் குழந்தையாகப் பாவித்து கவுன் போட்டு, காலில் வெள்ளி கொலுசு பூட்டி பெண் குழந்தையைப் போல் பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள். குழந்தையைக் கொஞ்சும் போது கூட  'அடி என் ராசாத்தி' என்றே கொஞ்சிக் குழாவினார்கள்.

                குழந்தை வளர வளர அது ஆண் குழந்தை என்பதையும் மறந்தவர்களாய் கவுனும் பாவடையும் சுடிதாருமாய் அணிவித்து அழகுப் பார்த்தார்கள். குழந்தைக்கு பெயர் சூட்டும் போது கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பெயராக தேடி பிடித்து   'தங்கமணி' என்று பெயர்  வைத்தார்கள். ஆனாலும் ஓர் ஆண் மகனுக்கு எத்தனைக் காலம் தான் பெண் வேஷம் போட முடியும்.

                 பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்ததும் வேறு வழியின்றி வேதனை நிறைந்த நெஞ்சுடன் சட்டையும் அரைக் கால் டிராயரும் வாங்கி மாட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். என்றாலும்.

அந்த ஆறு வயது காலம் எட்டும் வரை பெண்  வேஷத்தில் எடுத்த விதவிதமான புகைப் படங்களை ஆல்பமாக்கி அலமாரியிலும், லாமினேஷன்  செய்து சுவரில் மாட்டியும் வைத்து அழகு பார்த்துத் திருப்திபட்டுக் கொண்டார்கள்.

                இந்நிலையில் தான்....

                தங்கமணி வளர்ந்து பள்ளி இறுதி வகுப்பையும் எட்டிப் பிடித்து  நல்ல மதிப்பெண்களையும் பெற்று வந்தான். இந்நிலையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை---  மதிய நேரம்----


                சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் துலக்கி வைத்துவிட்டு சுந்தரி சமையல் உள்ளில்  இருந்து வெளிப்பட்டவர் தன் அறைக்குச் செல்லும் முன் தற்செயலாகத் தன் மகனின் அறைப்பக்கம் பார்த்தவள் திடுக்கிட்டாள்.--------

                அங்கே அவளைத் திடுக்கிட வைத்தது தங்கமணியின் தோற்றம்.  ஆம்--

                தங்கமணி தன் தாயின் ரவிக்கையை மாட்டிக் கொண்டு - தாயின் சேலையைக் கட்டிக் கொண்டு  நிலைக் கண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் எப்படி?

                அப்படியும்  - இப்படியுமாக நளினமாகத் திரும்பி அழகி போட்டியில் வருவோர் போஸ் கொடுப்பார்களே அப்படி!! இதைப் பார்த்ததும் சுந்தரியின் அடிவயிற்றில் அக்கினிக்குஞ்சு சுழன்றது.


                தன் வருகையை மகன் உணரும் முன் விறுவென்த் தன் அறைக்குள் நுழைந்தாள். கட்டிலில்  சண்முகம் குறட்டை விடாத குறையாக  அயர்ந்த நித்திரையில் இருந்தார்.

                கட்டிலில் அமர்ந்த சுந்தரியின் மனம் அனலிடைச்  சிக்கிய புழுவெனத் துடித்தது.

                சின்னஞ்சிறு ஆண்குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டுப் பார்ப்பது ஒரு தனி அழகு தான், ரசனை தான்!. ஆனால் அதே ஆண்மகன் பதினாறு வயதைத் தாண்டிய பின்னும் யாரும் அறியாமல் மறைமுகமாக சேலைக் கட்டி பெண் வேடமிட்டு தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசித்தால் அதில் ரசனையா இருக்கும். – அழகா வழியும்; அபத்தம் அல்லவா தலை தூக்கி நிற்க்கும்.

                சுந்தரியின் மணம் அழுதது. தன் மகனின் இந்த நிலைக்கு காரணம் யார்?

                குற்ற உணர்ச்சி தலை தூக்க விழிகள் சூடுநீரைக் கக்கத் தொடங்கின.
             
                பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் – பிறந்த ஆண் குழந்தையை இயற்கைக்கு விரோதமாக கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலம் வரை பெண் வேடமிட்டு பெண்ணாக பாவித்து பெண்ணைக் கொஞ்சிக் குழவுவது போல் குலவி – ‘தங்கம்மா வாடி கண்ணு!’ என்று கொஞ்சிக் குழவியதன் விளைவு இன்று ஒரு பயங்கரத்தைத் தோற்றுவித்த்தோ---?

                நடுங்கியது சுந்தரியின் உள்ளம்.

                மனதிற்க்குள் இந்த பயங்கரத்தை பூட்டி வைத்துக் குமுறிக் கொண்டிருக்க அவளால் முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த கணவனை மெல்ல தட்டி எழுப்பினாள்.
             
                ‘என்னங்க!...’

                கண் விழித்த சண்முகம் கண்ணீருடண் காட்சி அளித்த சுந்தரியைப் பார்த்தது பதறி விட்டான்.

                கணவனிடம் தான் கண்ட காட்சியை விவரித்தாள்.

                திடுக்கிட்ட சண்முகம் எழுந்து தன் மகனின் அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தான். அங்கே ---

                முழுக்க முழுக்க பெண் வேடம் தரித்து அன்ன நடை நடந்து ஒயிலாக அறையைச் சுற்றி வரும் மகனைப் பார்த்ததும் திகைத்து விட்டார்.

                தங்களின் இயற்க்கைக்கு மாறான பெண் குழந்தை ஆசையால் தன் மகனின் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் அவரது நெஞ்சில் கவ்வியது.

                தன் மகனைப் பெண்ணாகபு பாவித்து வளர்த்ததன் காரணமாக அவன் மணமும் அதுவாகவே மாறி கடைசியில் தன் மகன் திருநங்கையாகி விடுவானோ என்று எண்ணும் போது-

                சண்முகத்தின் நெஞ்சுக் குலை நடுங்கியது.

                மனைவியுடன் தன் அறைக்குள் நுழைந்தான். இருவரும் ரகசியமாக மந்திரலோசனை செய்தனர். கடைசியில் தகுந்த மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க சிகிச்சை அளித்து தாங்கள் செய்த பிழையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என முடிவு செய்தனர்.

                முடிவு செயல்படுத்தப்பட்டது.

                ஒரு பிரபல மனோத்தத்துவ மருத்துவரிடம் இருவரும் சென்று ஆதியோடந்தமாக நடந்த அனைத்தையும் தெரிவித்து பரிகாரம் கேட்டனர். மருத்துவர், அவனது குறையைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் ஒரு மருத்துவ நண்பரைப் பார்க்கப் போகிறோம் என்று கூறி இங்கு அழைத்து வாருங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அவ்வாறே ஒரு குறிப்பிட்ட நாளில் – குறிப்பிட்ட நேரத்தில் தங்கமணியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். நண்பரிடம் மகனை அறிமுகப் படுத்துவது போல் தங்கமணியை மருத்துவருக்கு அறிமுகப்படுத்தினர்.

                மருத்துவரும் புன்முறுவல் மாறா முகத்திடன் தங்கமணியின் படிப்பைப் பற்றி விசாரித்துக் கொண்டே சண்முகத்திடம் ,‘நீங்கள் கொஞ்சம் வெளியே போய் இருங்கள். நான் தங்கமணியிடம் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.’ – என்று இயல்பாகக் கூறி அவர்களை அனுப்பி விட்டு – தனது மருத்துவ முறைப்படி கேள்விக் கணைகளை தங்கமணி மீது தொடுக்க ஆரம்பித்தார். இப்படியே….

                ஒரு மணி நேரம் கழிந்தது. மருத்துவர் சண்முகத்தையும் சுந்தரியையும் அழைத்தார். படபடப்புடனும் பதட்டத்துடனும் வந்த அவர்களை உட்காரச் சொல்லி விட்டு தங்கமணியை மட்டும் கொஞ்சம் வெளியே போய் காத்திருக்குமாறு கூறி அனுப்பினார்.

                தங்கமணி அறையை விட்டு வெளியேறியதும் படபடப்புடன் சண்முகம் கேட்டார்.

                ‘டாக்டர்… என் மகன் எந்த நிலைமையில் இருக்கிறான்??

                மருத்துவர் புன்னகை சிந்தியப்படியே கூறினார்

                ‘கவலையே படாதீங்க. ஒரு குறையும் இல்லை. அவன் நல்லாவே – ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கிறான்.!!

                சுந்தரி கேட்டாள், ‘ அதில்லை டாக்டர். கொஞ்ச நாளாவே அவனது நடை உடை பாவனை எல்லாம் பெண்ணாகவே…’ – எனும் போது குறுக்கிட்ட மருத்துவர் கூறினார்.

                ‘அவனது நடை, உடை, பாவனைகள் பெண்ணாக மாறலே. - மாறாக அவன் பெண்ணாக மாத்திக்க முயற்சிக்கிறான் – நடிக்கிறான். புரியலே, அவங்க பள்ளிக் கூட நடகத்தில் அவன் நடிக்கிறான் – கதாநாயகியாக. தன் நடிப்பு தத்ரூபமாக அமைய அவன் அடிக்கடி தனிமையில் ஒத்திகை பாத்துக் கொள்கிறான்.  அதைப் பார்த்துதான் நீங்க வீணா கற்பனை செய்து பயந்து என்னிடம் ஓடி வந்திருக்கிறிர்கள். மற்றபடி உங்கள் மகன் ஆல்ரைட்’.
                ‘அப்பாடா’ என்று தம்பதியர் பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்தனர்.

                பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் மகனின் நடிப்பைக் கண்டு களித்த பெற்றோர் – மகள் இல்லா குறைத் தீர்க்க வந்த மகனின் பெண்வேடத்தைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்து மகிழ்ந்தனர்.


                கடவுள் கொடுப்பதை மனநிறைவுடன் ஏற்பவனே புத்திசாலி.

Thursday 26 June 2014

ஒரு சமாசாரம் - அத்தியாயம் - 2

          'நேத்து காந்தி வந்துருந்தாரு. மகாத்மா காந்தி தான். நானும் அவரும் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். என்ன அவருக்கு தமிழ் தெரியாது; எனக்கு இந்தி தெரியாது. ஆனாலும் பேசிக்கிட்டிருந்தோம்.  எப்படின்னு கேக்கிறீங்களா? அட அது ஒன்னும் பெரிய விஷயமில்லே. அவரு இந்தியிலே பேசினாரு - நான் தமிழ்லே பதில் சொன்னேன். அவ்வளவு தானே!.

சி.எம்.வி. பூங்காவில் நான் மெல்ல நடந்து (நடைப் பயிற்சி) வலம் வரும் போது ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ரொம்பவும் ஆர்வமாகவும் திவிரமாகவும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பாவம் , அவர் எதிரிலோ அருகிலோ  யாரும் இல்லை. அவரது பேச்சு சுவையாகப் பட்டதால் அவரது குரல் கேட்கும் தூரத்தில் நின்று அவர் பேசுவதை எல்லாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த என்னை அவர் பார்த்து விட்டார்.  உடனே --

'வாங்க சார், வாங்க, வாங்க! உங்களைத் தான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்திட்டு இருந்தேன். ஏன்னுன்னு கேக்கிறீங்களா? அது தான் சொல்லப் போறேனே, அதுக்குள்ள என்ன அவசரம்.'  ன்னு கூறிவிட்டு என்னைச் சில நெடிகள் உற்றுப் பார்த்த பின் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

           'சரி தான்! உங்களைத் தான். அவர் சொன்ன அடையாளங்கள் எல்லாம்  அப்படியே சரியா இருக்கே. நான் ஒரு பைத்தியம் யாருன்னு சொல்லாமலேயே பேசிக்கிட்டிருக்கேன் பாரு. வேற யாரும் இல்லே, நம்ம சிவாஜி கணேசன் தான். நேத்து வந்து உங்களை ரொம்ப விசாரிச்சாரு. உங்ககிட்ட கூட ஏதோ முக்கியமான விஷயம் பேசனுமாமே, சாய்ந்தரம் வந்தா பார்க்கலாம்னு நான் சென்னேன். அவருக்கு இப்போ புதுசா நாலு படம் புக்காகி இருக்காம். அதனாலே நேரம் இல்லே. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன். அவரைப் பார்த்தா சொல்லிருங்கன்னாரு. உங்க பேரு கூட சென்னாரு. அது என்ன பேரு.....  'என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு தலையிலும் ரெண்டு தட்டு தட்டி யோசித்துவாறே,  'மறந்துட்டேன். ஆனா என்ன.. நீங்க தான்  என் முன்னாலே நிக்கிறீங்களே, உங்ககிட்டே கேட்டாப் போச்சு. அது தெரியாம பாருங்க நான் ஒரு பைத்தியமாட்டம்  யோசனெல்லாம் பண்ணிட்டிருக்கேன். ஆமா,  உங்க பேர் என்ன? - என்று கேட்டார்.

நான் பதில் கூறாமல் வெறுமே புன்னகைத்தேன். ஆனால் அவர் அதைப் பத்தி கவலைப் படவில்லை.

பேரிலே என்ன இருக்கு. ஏதோ ஒரு பேரு. நமக்கு பேரா முக்கியம் ஆளு தானே! ஆனா சிவாஜி கணேசன் உங்க பேரைக் கூடச் சொன்னாரு. நான் பைத்தியம் மறந்துட்டேன்.

இப்படியே பேசிக் கொண்டிருந்த அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எண்ணெயே  காணாத பரட்டைத் தலை. முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் கருப்பாய் அழுக்கின் பதிவுகள். ஒரு கிழிந்த கறுப்புக் கோட்டு - கோட்டுக்குள்ளே  கோடு போட்ட அழுக்குச் சட்டை - அழுக்கேறி பழுப்பாகிப் போன ஒரு நாலு முழ வேஷ்டி.

முக்கியமாக முக்கால் முகத்தை மறைத்த தாடி, மீசை. வயது ஒரு அறுபதோ எழுபதோ இருக்கும். சரியாக கணிக்க முடியவில்லை.

அவரது பேச்சு நின்றபாடில்லை. மகாத்மா காந்தியில் இருந்து சிவாஜி கணேசனுக்கு வந்தவர் இப்போது தீடீர் என்று சாயி பாபாவிடம் தாவிவிட்டார்.

புட்டபத்தி போகணும்.  நாளக்கி போய் சாயிபாபவைப் பார்த்து  'சாமி  நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்! ' - என்று அவர் பிணாத்திக் கொண்டிருந்த போது முதுகில் தட்டும் உணர்வு ஏற்படத் திரும்பினால் -

சதாசிவம் நின்று கொண்டிருந்தார். மெஜீரா கோட்ஸில் டைப்பிஸ்டாக வேலை பார்த்து ஸ்டெனோவாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். என் பால்ய நண்பர்.

'அவரைத் தெரியுமா? ' - சதாசிவம் கேட்டார்.

 'இல்லை, இப்போதான் பார்க்கிறேன்!! '

                 எனக்குத் தெரியும். ரொம்ப வருஷமாத் தெரியும். அவர் ஒரு ஓவியர்  'மன்னன் ' என்ற புனைப் பெயரில் பல பத்திரிக்கைகளிலும் புத்தக அட்டைபடங்களிலும் ஓவியம் வரைந்தவர். இப்போது இப்படி ஆகிவிட்டார்! '

சதாசிவம் சொன்ன செய்தி எனக்கு அதிர்ச்சி ஊட்டியது.


                     - தொடரும் - 2 -

Wednesday 25 June 2014

மீனம்மா!!

ரகுராமன் வீட்டிற்கு நுழையவும் அவனது மகன் குமார் வீட்டு ஹாலில் கையில் கிரிக்கெட் பாலை வைத்துக் கொண்டு தொடையில் தேய்தேய் என்று தேய்த்து திருஷ்டி கழிப்பது போல் இரண்டு தடவை பால் மேல்  'தூ... தூ...'  என்று எச்சில் தூப்பி .. கையை மூன்று முறை சுற்றிச் சுழற்றி அந்த பாலை எறியவும் சரியாக இருந்தது.

'டாமால் !'

ஹாலின் சுவரோரம் மேஜை மேல் கம்பீரமாக வீற்றிருந்த மீன் தொட்டி பாலை காட்ச் பிடிக்க - தொட்டி உடைய - அதிலிருந்த தண்ணீர் சிதறி - அந்த தண்ணீரில் நிந்தி களித்துக் கொண்டிருந்த வண்ண வண்ண மீன்கள் தரையில் விழுந்து ( 'அய்யோ அம்மா!! ') என்று துடிக்க இக்காட்சிகளை எல்லாம் பார்த்த ரகுராமன் துடித்துப் போய்விட்டார்.

'டேய்டேய் நாசமாப் போறவனே! கிரிக்கெட் விளையாடுற இடமா இது?' - என்று கத்தித் திட்டித் தீர்த்தபடி வேகமாக செயல்பட்டு ஒரு பெரிய கோப்பையை எடுத்து அதில் அவசர அவசரமாய் தண்ணீர் ஊற்றி துடிக்கும் மீன்களை அவற்றிற்கு வலிக்கக்கூடாது என எண்ணுபவர் போல் நாசுக்காக  பிடித்து கோப்பை நீரில் நீந்த விட்டார். அப்படியும் இரண்டு மீன்கள் ஜீவசமாதி அடைந்தன.

அதைப் பார்த்த ரகுராமனுக்கு நெஞ்சடைத்தது. கண்களில் கண்ணீர் தளும்பி இறந்த இரண்டு மீன்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு வாடிக்கையான கடையில் ஒரு புதிய மீன் தொட்டிக்கு ஆர்டர் கொடுத்து - உடனே கொடுத்துனுப்புமாறு கட்டளையிட்டு ஓய்ந்தார்.

இத்தனை களேபரங்களுக்கு இடையில் சமையல் உள்ளிருந்து வந்த மனைவி ரகுராமனைப் பார்த்ததும்,  ' இப்போதான் வந்தீங்களா? இன்னிக்கி உங்களுக்கு ரொம்பப் பிடித்த  சமையல்' என்று கூறியதும் மனைவியை ?குறியுடன் பார்த்த ரகுராமனிடம் கூறினாள்,

        'மீன் குழம்பு. உங்களுக்கு ரொம்ப பிடித்த வஜ்ர மீன் குழம்பு!!'

ரகுராமனின் முகம் மலர்ந்தது. நாக்கில் நீர் ஊறத் தொடங்கியது.

Tuesday 24 June 2014

நிறைவு

         பிரபல எழுத்தாளர் சாகரனுடைய நாவல் ஒன்றிற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்ததை கொண்டாடும் முகத்தான் ஒரு விழா எடுக்க விழைந்தனர் அவரது ரசிகர்கள் சிலர். இதை சாகரனிடம் கூறிய போது முதலில் அவர் மறுத்தாலும் அன்பர்களின் வற்புறுத்தலால் ஒப்புதல் அளித்தார்.

         அடுத்த கட்டமாக அந்த விழாவிற்கு முன்னிலை வகுக்க பிரபல நடிகர் சூர்யாவை அழைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டதும் சாகரனால் அதை ஏற்க முடியவில்லை என்றாலும் அவரது மறுப்பு ரசிகர்களின் அன்பின் முன் நிலைத்து நிற்க முடியாமல் வளைந்து கொடுக்க வேண்டியதாயிற்று.

விழா நாள் குறிக்கப்பட்டது. சூர்யாவிடமும் தேதி பெறப்பட்டது.

எழுத்தாளர் சாகரனைப் பாராட்டிப் பலரும் பேசினர். விழாக்குழுவினர் எழுத்தாளர் பேசிய பின் கடைசியாக சூர்யா பேசுவதாக நிகழ்ச்சு நிரலை அமைத்திருந்தனர். இந்த இடத்தில் தான்  சாகரன் வேறுபட்டார். நான் நிகழ்ச்சியின் கதாநாயகன்.  எனவே என் உரை தான் இறுதி உரையாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

எழுத்தாளரின் முடிவை மாற்ற முடியாத விழாக்குழுவினர் சூர்யாவை பேச அழைத்தனர்.  சூர்யா எழுத்தாளரின் ஆத்ம ரசிகர். அவரது நூல்களில் பலவற்றைப் படித்தவர்.  எனவே எழுத்தாளரின் நூல்களின் எழுத்தின் சிறப்பை விவரித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறப்பாக உரையாற்றி அமர்ந்தார். இறுதியாக எழுத்தாளர் சகாரன் உரையாற்ற வேண்டும். அவரும் ஒலி வாங்கி முன் வந்து நின்றார்.

சூர்யா பேசி முடிக்கும் வரை அலை நிறைந்து ஆயிக்கணக்கில்  குவிந்திருந்த கூட்டம் அவர் பேசி முடித்ததும் கலையத் தொடங்கி மிகச் சிலரே இருபத்திரண்டு பேரே அமர்ந்திருந்தனர். எழுத்தாளர் சாகரன் பெருமிதத்துடன் உரையாற்றத் தொடங்கினார்.

''இது வரை கூட்டம் அவை நிறைந்திருந்தது. அது நண்பர் சூர்யாவிற்காக வந்த கூட்டம். அவரது உரை முடிந்த பின் வடிக்கட்டப்பட்டு இலக்கிய அன்பர்கள் - எனக்காக மட்டும் வந்த நீங்கள் இருக்கிறீர்கள். நானும் ஆயிரக்கணக்கானோர் முன் பேசுவதை விட என் இலக்கிய வாசகர்களாகிய  உங்கள் முன் பேசுவதையே  விரும்புகிறேன். ஆம் அப்போது அவை நிறைந்த கூட்டம். இப்போது என் மனம் நிறைந்த கூட்டம்"" எனக் கூறித் தன் மேலான இலக்கிய உரையை பெருமிதத்துடன் ஆற்றத்தொடங்கினார்''

Friday 20 June 2014

பெயர்த்தி - பேத்தி!


   
   ஒரு வயது கூட நிரம்பாத என் பேத்தி ஆராதனா என்னைப் பார்த்துத் தன் பொக்கை வாய் திறந்து சிரித்தப்படி 'தா....தா....!' - என்றாள். அவள் தாத்தா என்று அழைப்பது எனக்கு அவள் என்னிடம் எதையோ கேட்பது போல் இருந்தது.

     தொண்ணூறு வயதைத் தாண்டிய எனக்கும் பல் இல்லை... அவளுக்கும் பல் இல்லை.

     தாத்தாவும்  பேத்தியும் பொக்கைவாயர்!

     'என்னம்மா! என்ன வேணும்?'

     குழந்தையை கொஞ்சினேன். தொடர்ந்து அது மீண்டும் தன் கையை உயர்த்தி 'தா... தா...!' என்றது.

     என் மகள் முதன் முதலில் என்னை 'அப்பா!' என்று அழைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சியை விட என் பேத்தி என்னை 'தா(த்)தா' - என்றழைக்கும் போது பன்மடங்கு மகிழ்ச்சியை அடைகிறேன்.

     ஓ! அதனால் தான் பெயரன் - பேரன் - பெயர்த்தி - பேத்தி என்ற தமிழ் வழக்கு உருவாயிற்றோ?

ஓட்டை விட்டெறி - II



     கோன்கி என்ற முனிகுமாரன் தான் பிறந்த காலம் தொட்டு காட்டில் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். அவர் பிறந்த போதே அவரது தாயாரும் காலமாகி விட்டாதால் தன் தந்தை மற்றும் அவரது சீடர்களைத் தவிர வேறு யாரையும் அவன் பார்த்ததில்லை.
     தன் மகன் தக்க பருவம் எய்தி நான்மறையும் நன்கு கற்று தேர்ந்தபின் அவன் உலக அனுபவமும் பெற்றால் தான் அவனுது ஞானம் முழுமை எய்தும் என்று எண்ணிய முனிவர் மகனை அழைத்து அவனது கையில் ஒரு திருஓட்டையும் தந்து பக்கத்து நாட்டிற்க்குச் சென்று சிறுது காலம் வாழ்ந்து விட்டு வருமாறு கூறினார்.

     'அது சரி, அதற்கு எதற்கு இந்த திருஒடு என்று கேட்ட மகனிற்கு, 'நாட்டில் உணவை யாசித்துப் பெற பாத்திரம் ஒன்று தேவைப்படும். அதற்கே இந்தத் திருஓடு!' - என விளக்கம் கூறி அனுப்பினார்.

     காட்டைக் கடந்து நாட்டிற்குள் நுழைந்த இளம் துறவி 'கோன்கி' ராஜவீதிகளில் நடந்து செல்லும் போது எதிரே வந்த ஒரு பெண்ணைக் கண்டு வியப்புற்றார். அப்படி ஒரு உருவத்தை இதுவரை அவர் கண்டதே இல்லை. எனவே அப்பெண்ணின் அருகே சென்று 'வித்தியாசமான உருவத்துடன் காணப்படும் தாங்கள் யார்?' என்று பணிவுடன் கேட்டார்.

     அக்காலப் பெண்கள் ஒருவனைக் கண்ட மாத்திரத்தில் அவனை எடைபோட்டு உணரும் அளவிற்கு பலவித கல்வி கேள்விகளில் சிறந்து  விளங்கியவர்கள். எனவே, அவள் கோன்கியைப் பார்த்ததும் அவனது கள்ளமற்ற உள்ளத்தை உணர்ந்தவளாய், 'ஐயா, நான் ஒரு பெண். இறைவன் படைப்பில் ஆண், பெண் என்ற இரு நிலைகள் உள்ளன. அதில் தாங்கள் ஆண் என்ற நிலையினர். நான் பெண் என்ற நிலையினள்!'  என்றாள். எனினும் கோன்கியின் வியப்பு குறையவில்லை. 'அதெல்லாம் சரி, ஆனால் என் மார்பு அகன்று விரிந்து ஒரே சம அளவில் இருக்கிறது. ஆனால் தங்கள் மார்பு மட்டும் அப்படி அல்லாமல் இரண்டு புறமும் வீங்கி புடைத்து உள்ளனவே. அது ஏன்?' என்று கேட்டார்.

     அப்பெண் அத்துறவியின் நிர்மலமான உள்ளத்தை உணர்ந்தவளாதலின் சிறிதும் சினம் கொள்ளாமல் மிகப் பொறுமையுடன், 'துறவியே, பெண்களாகிய நாங்கள் குழந்தை பெறும் தகுதிபடைத்தவர்கள். பிற்காலத்தில் என் போன்ற பெண்களுக்குப் பிறக்குப் போகும் குழந்தைகள் பசியாறப்பால் பருக வேண்டுமே என்று இறைவன் படைத்த கிண்ணங்களே இந்த வீக்கங்கள்!' என்று கூறினார்.

     அவளது கூற்று துறவியைச் சிந்திக்க வைத்தது. எப்போதோ பிறக்கப் போகும் குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போது அதற்குரிய பாத்திரங்களை உருவாக்கி வைத்த இறைவன்  - இப்போது வாழும் எனக்கு உணவை எங்கேனும் உருவாக்கி வைத்திருக்க மாட்டாரா? அப்படி இருந்தும் அந்த இறைவன் மீது நம்பிக்கை இன்றி இந்த திருஒட்டை சுமந்து திரிகிறேனே!' என்று மனதிற்குள் மருகிய கோன்கி தன் கையில் இருந்த திருஒட்டை விட்டெறிந்து விட்டு எதிரே இருந்த கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.